கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புகழ்பெற்ற தலைமை பதியான இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அய்யாவுக்குப் பணிவிடை உள்ளிட்ட நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மந்திரங்கள் முழங்க திருக்கொடி கோயில் வளாகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட கொடியில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.