மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டுக் கொடுக்க மறுத்த எம்.சாண்ட் குவாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது திமுக வட்டசெயலாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருநீர்மலையில் பீட்டர் கஸ்பர் என்பவர், அரசு அனுமதியுடன் எம்.சாண்ட் மணல் குவாரி நடத்தி வருகிறார். இவரிடம் பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீதர் ஆகியோர், எம்.சாண்ட் மணல் குவாரி நடத்த மாதம் 3 லட்சம் ரூபாய் வீதம் மாமூல் வசூலித்து வந்துள்ளனர்.
அந்தவகையில் அவர்கள் இதுவரை 75 லட்சம் ரூபாய் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது குவாரி சரியாக இயங்காததால் பீட்டர் கஸ்பர் மாமூல் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த திமுக வட்ட செயலாளர் அனிஷ் உள்ளிட்டோர் குவாரி லாரி ஓட்டுநரையும், அவரது மனைவியையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் காயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திமுக வட்ட செயலாளர் அனிஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநரின் மனைவி, குவாரி உரிமையாளர் பீட்டர் கஸ்பர் உள்ளிட்டோர் காவல் ஆணையரகத்தில் புகாரளித்தனர்.