வேலூரில் தன்னிடம் பேசுவதைத் தவிர்த்த பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு, சம்பந்தப்பட்ட நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் சின்ன அல்லா புரத்தைச் சேர்ந்த சபீனாபானு என்பவர் திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் சுரேஷ் என்பவருடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென சுரேஷுடன் பேசுவதை அவர் நிறுத்தி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் சபீனாபானு வீட்டிற்கு நேரில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து கடுமையாகத் தாக்கி உள்ளார்.
இதில், படுகாயமடைந்த சபீனாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தடுக்க முயன்ற அவருடைய பெற்றோரையும் தாக்கி விட்டு சுரேஷ் தப்பி சென்றார்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், தப்பிச் சென்ற சுரேஷை தேடி விருப்பாட்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அங்கு அவர் தூக்கிட்டு சடலமாகக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.