ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாகிஸ்தான் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவர்களைப் பாராட்டிய ட்ரம்பின் இந்த கொள்கை மாற்றம் எதைக் காட்டுகிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு எந்த இடங்களிலிருந்து தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட்டு வருவது குறித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள், நேரடி போர் பயிற்சியைத் தவிர, முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிதி, தளவாடங்கள், கோட்பாடு மற்றும் ராணுவ ஆதரவு வடிவில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ISI நிறுவனத்திடமிருந்து ரகசிய உதவியைப் பெற்று வருகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு, இந்தியா கொடுத்த ஏவுகணை தாக்குதல்களைப் பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. பதிலுக்கு இந்தியா மீது 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனாலும், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியவில்லை.
இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்தது. மேலும்,பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைச் சுக்கு நூறாக்கியது. இந்தியாவின் பதிலடியைத் தாங்க முடியாத அணு ஆயுத நாடான பாகிஸ்தான் இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி மன்றாடியது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதைப் போர் அறிவிப்பாகக் கருதி, மீண்டும் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று இந்தியா வெளிப்படையாக எச்சரித்தது.
சர்வதேச பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் கலந்து கொண்டதும் . கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்தியதும், பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை அம்பலப் படுத்தியது.
பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று இந்தியா தெளிவு படுத்தியது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியக் காலவரையறை இன்றி நிறுத்தியது.
பயங்கரவாதத்தைக் கைவிடாவிட்டால், பாகிஸ்தான் அழிக்கப்படும் என்று இந்தியா எச்சரித்தது. இறுதியாக, அணு ஆயுத அச்சுறுத்தலைப் பொறுத்துக்கொள்ளாது என்றும், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது பற்றியும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் இந்தியா கூறியது.
இதற்கிடையே, இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தானின் சீனப் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கி அழித்தன என்று பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
பாகிஸ்தான் ராணுவம் தோற்று விட்டது என்ற உண்மை தெரிந்துவிட்டால், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் நாட்டுக்குப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படக் கூடும் என்ற அச்சமே பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை நியாயப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜ்ஜிய துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு குழுக்களை உலகின் ஏழு மூலைகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராஜதந்திர தாக்குதல் பற்றி விளக்க 32 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இருக்கும் சியரா லியோன், அல்ஜீரியா, பனாமா மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கும் இந்தியக் குழுக்கள் சென்றுள்ளன.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. அரபு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.
பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்கிய சீனா. துருக்கியை இந்தியா அடையாளம் கண்டு விலக்கியுள்ளது. அதேபோல், பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தி வரும் வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்தியா விளக்கமளிக்க ராஜதந்திர குழுக்களை அனுப்பவில்லை.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நம்ப வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்தியா இஸ்ரேலுக்குக் குழுவை அனுப்பவில்லை. மற்ற நாடுகள் அமைதியைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது என்றும், அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைச் செய்துவிட்டு ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதைப் பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல்தான் உடனடியாக கூறியது.
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக முதலில் அறிவித்த ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தைத் தவிர்க்க உதவ முன்வருவதாகக் கூறினார். முன்னதாக ஈரானும் இதையே சொல்லியிருந்தது. பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை விரும்பவில்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், அணு ஆயுத போர் உருவாகும் என்ற இந்த அச்சத்தைத் தூண்டவே பாகிஸ்தான் விரும்புகிறது. அணு ஆயுதப் போரைத் தடுத்ததாகவும், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாகவும் கூறியுள்ள ட்ரம்பின் கருத்துக்கள், பாகிஸ்தானின் திட்டத்துக்கு மறைமுகமாக உதவுகிறது.
சமீபத்தில்,தென்னாப்பிரிக்க அதிபரை வைத்துக் கொண்டு,பாகிஸ்தானின் தலைவர்களை ட்ரம்ப் பாராட்டிய தோடு,பிரதமர் மோடியையும் வணங்குவதாகச் சொன்னார். பாகிஸ்தான் தலைவர்களை,சீனாவும் மற்ற இஸ்லாமிய நாடுகளும் கூட இதுவரை பாராட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ட்ரம்ப் கொடுத்த ஆதரவின் காரணமாகவே, பாகிஸ்தான் அரசு , ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீரை நாட்டின் இரண்டாவது Field Marshal ஆக உயர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு, 130 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தகத்தைச் செய்த இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ட்ரம்பின் பாகிஸ்தான் நிலைப்பாடு ஒரே குழப்பமாக உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர்.