உதகை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டியும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கின்றன. மதுபிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் சாலையோரப் பூங்காக்கள் குறித்தும், அதனால் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழும் உதகையின் அழகை மேம்படுத்தும் வகையில் சாலையோரப் பூங்காக்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உதகையில் மொத்தமாக இருக்கும் 11 சாலையோரப் பூங்காக்கள் குறித்த போதுமான விளம்பரமின்மை காரணமாக, சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றன.
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றும் பணிகள் நகராட்சி நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் பூங்காக்களில் அரியவகை மூலிகை தாவரங்களும், மரங்களும் நடப்பட்ட நிலையில், அவைகள் முறையாக பாரமரிக்காத காரணத்தினால் தற்போது பூங்கா முழுவதும் புதர்மண்டியாகவும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கிறது.
லோயர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பூங்காவான சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவும் முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறந்த பொழுதுபோக்கு தளங்களாக இருக்கும் பூங்காக்களை முறையாகப் பராமரித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.