கற்பனை செய்து பார்க்க முடியாத சோகமாக, காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில், ஒரு மருத்துவ தம்பதியரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோகம் பற்றிய செய்தி தொகுப்பு.
2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய படுகொலை தாக்குதலுக்குச் சரியான பதிலடி ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிப்பதாகும் என்று சூளுரைத்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பது தங்களின் உரிமை மட்டுமல்ல கடமை என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நடந்த போரில், இதுவரை சுமார் 16,500 குழந்தைகள் உட்படக் குறைந்தது 55,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில், காசா மீது முழுமையான முற்றுகையை விதித்த இஸ்ரேல், மீண்டும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக இதுவரை சுமார் 4000 கொல்லப்பட்டுள்ளதாகவும் 500,000க்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பின்றிப் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் காசாவின் சுமார் 75 சதவீத நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் நோக்கமாகும்.
காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒரு ஆபத்தான போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல், அப்பகுதி மக்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்திருந்தது. எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென காசா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் தொடங்கிய 24 மணி நேரத்தில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், ஹம்தி அல்-நஜ்ஜார் என்ற மருத்துவர், குழந்தை மருத்துவரான தனது மனைவி அலா நஜ்ஜரை, வேலைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது வீடு தாக்கப்பட்டுள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் முனீர் அல்போர்ஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில், இந்த மருத்துவ தம்பதியரின் பத்து குழந்தைகளில், ஏழு மாதங்கள் முதல் 12 வயதுக்கு உட்பட்ட ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரேயொரு மகனும், படுகாயமடைந்த ஹம்தி அல்-நஜ்ஜாரும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவின் கொடுமையான நிலைமை இதுதான் என்று கூறியுள்ள காசா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் முனீர் அல்போர்ஷ், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை மட்டும் குறிவைக்காமல், அவர்களின் முழு குடும்பத்தையும் இஸ்ரேல் அழித்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை மருத்துவராகப் பல ஆண்டுகளாகப் பல குழந்தைகளைப் பராமரித்து வந்த அலா நஜ்ஜர், இஸ்ரேலின் ஒரே ஏவுகணைத் தாக்குதலில் கிட்டத்தட்ட தனது 9 குழந்தைகளை இழந்த துயரம், தாங்கமுடியாத கொடூரமாகும். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசாவில் கேட்கும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகளின் சத்தங்களை விட அதிகமாக மொத்த குடும்பத்தை இழந்துள்ள டாக்டர் அலாவின் கூக்குரல், உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.