நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு, 6 மாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்குச் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள் மற்றும் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் வசதிக்காகக் கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில், தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் ‘கட்டண வார்டு’ கட்டி முடிக்கப்பட்டது.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த நவம்பர் மாதம் திறந்து வைத்த நிலையில், 6 மாதங்களுக்கு மேலாகியும் கட்டண வார்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கட்டண வார்டை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நோயாளிகள் வசதிக்காகக் கூடுதல் எம்.ஆர்.ஐ இயந்திரம் வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.