விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மயிலம் முதல் திருச்சிற்றம்பலம் வரையிலான இருவழிச்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது. சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி மயிலம் முதல் வானூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலையின் இருபுறமுள்ள நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மரங்களை வெட்டாமல் அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.