தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி நடப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தவெக பெண் நிர்வாகிகள் அத்தியாவசிய உதவிகள் வழங்கியபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைக் கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், தீ விபத்தில் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய குற்றச்செயலா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவுவதையும் காவல்துறை தடுக்கிறதென்றால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என வினவியுள்ள விஜய்,
காவல்துறையினரின் அத்துமீறலைத் தட்டிக்கேட்ட பெண் நிர்வாகிகள் பூட்ஸ் காலால் தாக்கப்பட்டதையும், ஆடைகள் கிழியும் அளவுக்குத் தள்ளி விடப்பட்டதையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த அராஜக செயலில் ஈடுபட்டுத் தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.