திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை கனமழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் அமராவதி அணை நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 57.58 அடியாகக் காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.