ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் சகோதரர், கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுவனைக் கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மூத்த காவல் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், எதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஏடிஜிபியின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதற்கு தமிழக அரசு தரப்பில், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
















