சென்னையில் போக்குவரத்து போலீசார் போல் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பி ஏமாற்றி, வங்கி கணக்கில் இருந்து 12 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த இரு தினங்களுக்கு முன் இவரது இருசக்கர வாகனத்தில் செந்திலின் மனைவியும், அவரது தம்பியும் வெளியே சென்றுள்ளனர்.
தொடர்ந்து அவரது வாகனம் மூலம் போக்குவரத்து விதிமீறல் நடந்ததாகப் போக்குவரத்து போலீசார் அனுப்புவது போன்ற குறுந்தகவல் செந்திலின் செல்போனுக்கு வந்துள்ளது. அபராதம் குறித்து அறியச் செந்தில் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்தபோது, அவரது செல்போன் ஹேங் ஆனதால் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின் செல்போனை ஆன் செய்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து 12 ஆயிரத்து 600 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததைக் கண்டு செந்தில் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இந்த மோசடி குறித்து செந்தில், சைபர் கிரைம் உதவி எண்ணுக்கும், பெரும்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
















