புதுச்சேரி பாஜக தலைவராக முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், தலைவர்களை புதிதாக மாற்றி அமைக்கும் பணியில் பாஜக தேசிய தலைமை ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு தலைவரை நியமிப்பதில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்தது.
இதனிடையே, புதுச்சேரியில் பாஜக அமைச்சர் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இதில், முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், புதுச்சேரி பாஜக மாநில தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.