கொல்கத்தாவில் 24 வயது மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ராவுடன் பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. யார் இந்த மனோஜித் மிஸ்ரா? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு பெண் முதல்வராக இருக்கும் மேற்குவங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. சென்ற ஆண்டு, கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு, தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒரு மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. கடந்த புதன் கிழமை இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை கல்லூரி வளாகத்தில் தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக்குவதாக வாக்குறுதி அளித்து கல்லூரி வளாகத்துக்கு வரவழைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், குற்றத்தில் ஈடுபட்டதாகக் கல்லூரியில் படிக்கும் பிரமித் முகர்ஜி, ஜே அகமது ஆகியோரை முதலில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், முக்கிய குற்றவாளியான சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நான்காவது நபராக, 55 வயதான கல்லூரி பாதுகாப்பு காவலாளி பினாகி பானர்ஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட நான்கு பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல்,மற்றும் செய்த குற்றங்களுக்குக் கூட்டுப் பொறுப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிஸ்ராவின் தொலைப்பேசியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான “ஆபாச” வீடியோக்கள் கிடைத்ததாகவும், அதன் மூலம் அவர் அந்தப் பெண்ணை மிரட்ட முயன்றதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். 31 வயதான மனோஜித் மிஸ்ரா, மூத்த திரிணாமுல் தலைவரின் பரிந்துரையின் மூலம் 2012 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஏற்கெனவே, ஒரு மாணவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரின் 2015 ஆம் ஆண்டு கல்லூரியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்தபின் 2017 ஆம் ஆண்டு மீண்டும் கல்லுரியில் சேர்க்கப் பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல மூத்த கட்சித் தலைவர்களுடனான நெருக்கத்தால், படிப்பை முடித்த பின்னும் ஒரு செல்வாக்கு மிக்க நபராகவே கல்லூரிக்குள் மிஸ்ரா வலம் வந்துள்ளார்.
பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இருக்கும் படங்களை மிஸ்ரா தனது சமூக ஊடகப் பக்கங்களில் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளார். சட்டக் கல்லூரியில் (Trinamool Chhatra Parishad unit ) திரிணாமுல் சத்ரா பரிஷத் பிரிவின் முன்னாள் தலைவரான மிஸ்ரா, கல்லூரியில் மாணவர் அமைப்பின் செயல்பாடுகளுக்கு முக்கிய அமைப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் கொண்ட மூத்த மாணவர் தலைவராக இருந்ததால், மிஸ்ராவுக்கு மாணவர் பிரிவு பொறுப்பு வழங்கப்பட்டது என்றும்,மாணவர் பிரிவின் செயல்பாடுகளைக் கவனிக்கவே படிப்பு முடிந்த பின்னும் கல்லூரிக்குத் தவறாமல் வந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் சத்ரா பரிஷத் பிரிவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தெற்கு கொல்கத்தா மாவட்டப் பிரிவின் அமைப்புச் செயலாளராக மிஸ்ரா பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் மிஸ்ரா மீது உள்ளன.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த “இரவை மீட்டெடு” இயக்கத்தில் பங்கேற்றவர்களையும் மிஸ்ரா மிரட்டியதாகவும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. மிஸ்ரா மீது பாலியல் வன்கொடுமை உட்படப் பல குற்ற வழக்குகள் இருந்தபோதிலும், கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரியில் ஒரு சாதாரண ஊழியராக மிஸ்ரா, பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் (Budge Budge)பட்ஜ் பட்ஜேயின் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (Ashok Deb) அசோக் தேப் தலைமையிலான நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில், காவல்துறை சரிபார்ப்பு எதுவும் இல்லாமல் மிஸ்ரா பணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெண்களுடனான அந்தரங்க தருணங்களை இரகசியமாகப் படம்பிடித்து தனது நண்பர்களுக்குக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மிஸ்ரா, மாணவிகளின் படங்களை எடுத்து, மார்ஃபிங் செய்து, வாட்ஸ்அப் குழுக்களில் பரப்புவது, உடல் ரீதியாகப் பெண்களை அவமானப்படுத்துவது என அருவருக்க தக்க நபராகவே இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இது பெரும் தலைவலியாகும் என்று கூறப்படுகிறது. மேற்குவங்க தலைநகரில் கல்லூரி வளாகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது மறுக்க முடியாத உண்மை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.