பொன்னேரி அருகே ஒரு சவரன் நகையை வரதட்சணையாகக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
பன்னீர் குடும்பத்தினர் 10 சவரன் வரதட்சணை கேட்ட நிலையில், லோகேஸ்வரி குடும்பத்தினர் 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 4 சவரன் நகையை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.
சீர்வரிசை பொருட்கள், இருசக்கர வாகனம் சீதனமாக வழங்கிய நிலையில், மீதமுள்ள ஒரு சவரன் நகை கேட்டு லோகேஸ்வரியை மணமகனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தாய் வீட்டுக்கு வந்த லோகேஸ்வரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணம் ஆகி நான்கு நாட்களில் பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.