சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், நகை திருடுபோனதாகப் புகார் அளித்த நிகிதா என்பவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரின் பேரில் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் என்பவர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டு புகாரளித்த மருத்துவரான நிகிதா மற்றும் அவரது தாய் ஸ்ரீதேவி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு துணை முதல்வரின் உதவியாளர் தெரிந்தவர் எனக்கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ள நிலையில், அஜித்குமார் வழக்கு தொடர்பாக மருத்துவர் நிகிதா பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.