அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் 30 ஆண்டுகளாக இந்தியா பிரதமர் யாரும் கானா நாட்டிற்கு செல்லாத நிலையில் பிரதமர் மோடி சென்றுள்ளார்.
கானா தலைநகர் அக்ராவுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் ஜான் மஹாமா ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அதிபர் ஜான் மஹாமா மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியா – கானா இடையேயான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து அக்ரா நகரில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் இந்திய தேசிய கொடியை காண்பித்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களுடன் பிரதமர் கைக்குலுக்கி மகிழ்ந்தார். பல்வேறு மந்திரங்களை உச்சரித்து பிரதமருக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.