சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவரை மீட்ட பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகாலில் இயந்திரம் மூலம் துளையிடும் பணியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மற்றும் மணிகண்டன் ஆகிய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலத்திற்கு அடியில் இருந்த மின்சார கேபிளில் இயந்திரம் பட்டதில் தொழிலாளிகள் இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த இருவரையும் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி குமார், வடிகாலுக்குள் குதித்து இருவரையும் காப்பாற்றி மேலே தூக்கி வந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் இருவரையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.