நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 17 சிறுவனை, பாஜக எம்.எல்.ஏ காந்தி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது 17 வயது மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுவனை வழிமறித்துள்ளனர்.
பின்னர் சீருடை அணியாத நிலையில் தங்களை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், சிறுவனிடம் அவரது தந்தை குறித்து வினவியதாக கூறப்படுகிறது.
அப்போது தந்தை குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறிய சிறுவனை, அவர்கள் வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தப்பியோட முயன்ற சிறுவனை இருவரும் கை மற்றும் லத்தியால் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
அவர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பியோடிய சிறுவன் வீட்டிற்கு சென்றபோது கழுத்து வலியால் அவதிப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் குடும்பத்தார் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சிறுவன் தரப்பில் இருந்து ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனையும், அவரது குடும்பத்தாரையும் பாஜக எம்.எல்.ஏ-வான எம்.ஆர் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை எனவும், முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை கவனமாக கையாள தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.