வரதட்சணை பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளப் போவதில்லையென, ரிதன்யாவின் தாய் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புது மணப்பெண் ரிதன்யா, வரதட்சணை பிரச்னையால் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவரது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ரிதன்யா அனுப்பிய ஆடியோ பதிவில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.
வரதட்சணை கேட்டு ரிதன்யாவை துன்புறுத்திய புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் விசாரணை மந்த கதியில் நடப்பதாக கூறி ரிதன்யாவின் தாய் வேதனையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
















