பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் தக்காளியின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளிமாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 14 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
உழவர் சந்தைகளில் கிலோ 32 முதல் 36 ரூபாய் வரையும், வெளி அங்காடியில் கிலோ 45 முதல் 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.