ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கிய சம்பவத்தில் சிறப்புக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து நிலையத்தில் தங்கவேலு என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் சிறப்புக் காவலர் லிங்கசாமியிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனடிப்படையில், ஜூன் 14ஆம் தேதி தங்கவேலுவின் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது சிறப்புக் காவலர் லிங்குசாமியைத் தரக்குறைவாகப் பேசிய தங்கவேலு, அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பதிலுக்குக் காவலர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தங்கவேலுவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இருதரப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாகச் சிறப்புக் காவலர் லிங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.