கோவை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் பெருமளவு கசிவு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பாகவே போதுமான நிதியை ஒதுக்கி அணையைப் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த சிறுவாணி அணை. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கும் நீரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது அணைக் கட்டி சேமிக்கப்பட்டது.
1970 களில் கோவை நகரின் நீர்ப்பற்றாக்குறையைப் போக்கத் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி பழைய அணைக்குக் கீழ்ப்பகுதியில் புதியதாகப் பெரிய சிறுவாணி அணை கட்டப்பட்டது.
சிறுவாணி அணையின் நீர்த்தேக்க அளவு 50 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக்காலமாக நீர் மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே தண்ணீரை வெளியேற்றுவதால் கோடைக்காலத்தில் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணியின் குறுக்கே புதிய அணைகட்ட கேரள அரசு முயற்சி செய்வதாகப் புகார் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன.
ஆனால் தற்போது சிறுவாணி அணையில் அதிகப்படியான கசிவு ஏற்படுவதாக அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களும் வெளியாகியுள்ளன. அணையில் ஏற்பட்டுள்ள கசிவைத் தமிழக அரசு அலட்சியமாகக் கருதாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைகளின் பராமரிப்பு பணியில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
அணையில் 45 அடி வரை தண்ணீரைத் தேக்குவதற்கான சூழல் இருந்தாலும் அதனைச் செய்யாமல் வேண்டுமென்றே தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் செயற்கையாக ஏற்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் கேரள அரசின் முயற்சிக்கு இணங்காமல் உரிய நிதியை ஒதுக்கி சிறுவாணி அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு கோடைக்காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு ஏற்படவிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.