இந்தியக் கடற்படைக்காக ரஷ்யாவில் கட்டப்பட்ட ஏவுகணை தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் தமால் கடந்த செவ்வாய் கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐஎன்எஸ் தமால் போர்க் கப்பலின் சிறப்பு பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2016 ஆம் ஆண்டு, இந்தியக் கடற்படைக்காக,ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாகத் தயாரிப்பு பணி தொடங்குவது தாமதமானது. அடுத்து, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது. இதன் காரணமாக, ரஷ்யாவில் இரண்டு போர்க்கப்பல்களை மட்டுமே தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பிறகு, ரஷ்யாவின் கடலோர நகரமான (Kaliningrad) கலினின்கிராட்டில் உள்ள (Yantar)யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் போர்க்கப்பல்களைத் தயாரிக்கும் பணி தொடங்கியது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டு போர்க் கப்பல்களின் தயாரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
இதனையடுத்து, 3,900 டன் எடை, 409 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட துஷில் எனப் பெயரிடப்பட்ட போர்க்கப்பல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஐஎன்எஸ் தமால் என்ற போர்க் கப்பல், இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. விரிவான கடல் மற்றும் துறைமுக சோதனைகளை முடித்தபின், ஐஎன்எஸ் தமால் விரைவில் ( Karwar ) கார்வாரை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் எட்டாவது போர்க்கப்பல் இதுவாகும். இந்தப் போர்க் கப்பல், முழு அளவிலான நீல நீர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
125 மீட்டர் நீளம், 3900 டன் எடை, ஐஎன்எஸ் தமால், கடல் மற்றும் நிலத்தைக் குறிவைக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற நீண்ட தூர ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகும்.
விரிவாக்கப்பட்ட செங்குத்து ஏவுதல் தரையிலிருந்து வான் ஏவுகணைகள், கனரக (torpedoes) டார்பிடோக்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் ஏவுகணைகளுடன் இந்தப் போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைக்கான (Kamov-28)கமோவ்-28 மற்றும் ( Kamov-31) கமோவ்-31 ஆகிய ஹெலிகாப்டர்களையும் இயக்கும் திறனும் இணைக்கப் பட்டுள்ளது.
இந்திய- ரஷ்ய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியாவில் மேம்படுத்தப் பட்டுள்ளன.
ரஷ்யாவின் S-500 போன்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளின் கண்டறிதல் வரம்பைத் தாண்டியும் செயல்படும் திறனுடன் இந்தப் போர்க் கப்பல் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கப்பல் F-35, Su-57 மற்றும் சீனாவின் J-35A போர் விமானங்களை அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.
இந்தப் போர்க் கப்பலில் உள்ள சென்சார்கள் மற்றும் ஆயுதங்கள்,முழுநேர கண்காணிப்பு மற்றும் விரைவான செயல்பாட்டுக்கும் ஒருங்கிணைந்த போர் மேலாண்மை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இலக்கை கையகப்படுத்துதலுக்கான மின்னணு போர் தொகுப்புகள் மற்றும் Electro-Optical/Infrared. அமைப்புகளும் இந்தப் போர்க் கப்பலில் உள்ளன. தானியங்கி தீ தடுப்பு மற்றும் சேதக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பாதுகாப்பு அமைப்புகளும் இந்தப் போர்க் கப்பலை மேம்பட்ட கடற்படை ஆயுதமாக மாற்றியுள்ளது.
26 கடற்படை அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சுமார் 250 மாலுமிகள் உள்ள இந்தப் போர்க் கப்பல், எங்கும் எப்போதும் வெற்றி என்ற குறிக்கோளின் கீழ் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாக்க எந்த நேரத்திலும், எங்கும், பாதுகாவலாக இருக்கும் ஐஎன்எஸ் தமால், இந்தியக் கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.