வரும் ஜூலை 6 ஆம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் 14 வது தலாய் லாமா, தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்றும், இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சீனாவின் எதிர்ப்பையும் அவர் புறக்கணித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1935 ஆம் ஆண்டு, ஜூலை 6 ஆம் தேதி, வடகிழக்கு திபெத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு லாமோ தொண்டப் என்று பெயரிடப் பட்டது. இந்த அற்புத குழந்தைக்கு இரண்டு வயதான போது, முந்தைய தலாய் லாமாவின் மறுபிறவியாக அடையாளம் காணப் பட்டது.
மூத்த துறவிக்குக் காட்டப்பட்ட தெய்வக் காட்சி உட்பட பல அறிகுறிகளின் அடிப்படையில், லாமோ தொண்டப் அடுத்த தலாய் லாமாவாக, திபெத்திய அரசால் அனுப்பப்பட்ட குழு முடிவு செய்தது. 13வது தலாய் லாமாவின் உடைமைகளை “இது என்னுடையது, இது என்னுடையது” என்ற சொற்றொடருடன் குழந்தை அடையாளம் கண்டபோது இந்தக் குழந்தை தான் அடுத்த தலாய் லாமா என்பது உறுதி செய்யப்பட்டது.
1940ம் ஆண்டு குளிர்காலத்தில், லாமோ தொண்டப், இன்றைய திபெத் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திபெத்தியர்களின் மதத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
திபெத்தில் இருந்து 1959-ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் தர்ம சாலாவில் 14வது தலாய் லாமா வசித்து வருகிறார். தலாய் லாமாவின் பாரம்பரியம் மற்றும் நிறுவனத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக, காடன் போட்ராங் அறக்கட்டளையை தலாய் லாமா உருவாக்கினார்.
ஏற்கெனவே, தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளின் போது தனது வாரிசுரிமை பற்றிய விவரங்களை வெளியிடுவதாக எழுதியுள்ளார். மேலும் அடுத்த தலாய் லாமாவாக யாரை தனது வாரிசாக அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான், தனது அறக்கட்டளை தொடரும் என்றும், அறக்கட்டளை தவிர வேறு யாருக்கும் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1989ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி திபெத்தின் லாரி கவுண்டியில் பிறந்த கெதுன் சோக்கி நியாமாவை 11வது பஞ்சன் லாமாவாக அறிவித்தார். அப்போது,கெதுன் சோக்கி நியாமாவுக்கு ஆறு வயதுதான்.
11வது பஞ்சன் லாமாவாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு,கெதுன் சோக்கி நியாமாவும் அவரது குடும்பத்தினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில், சீனா கியான்கைன் நோர்புவை அதிகாரப்பூர்வ பஞ்சன் லாமாவாக சீனா நியமித்தது. அவரது பெற்றோர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நியமனத்தை திபெத்தியர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் பரவலாக நிராகரித்தனர்.
பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணம் காட்டி, 11வது பஞ்சம் லாமாவும் அவரது குடும்பத்தினரும் இரகசிய இடத்தில் பத்திரமாக அடைத்து வைத்திருப்பதாக சீன அரசு உறுதிப்படுத்தியது. இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளாக, கெதுன் சோக்கி நியாமாவின் இருப்பிடம் மற்றும் நிலை யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, மிக நீண்ட காலமாகக் காணாமல் போன சம்பவங்களில் இது முக்கியமானதாகும்.
கடந்த மே 25ம் தேதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வயதில் சீன அதிகாரிகளால் கடத்தப்பட்ட 11வது பஞ்சன் லாமாவான கெதுன் சோக்கி நியாமாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
2007 ஆம் ஆண்டில், அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க புதிய விதிமுறைகளைச் சீனா விதித்துள்ளது. அதன்படி, சீனாவில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்றும் அடுத்த தலாய் லாமா, தான் சீனாவில் பிறந்தற்கான ஒப்புதலைச் சீன அரசிடம் பெறவேண்டும் என்றும் சீனாவின் புதிய விதிமுறை சொல்கிறது.
மேலும், தலாய் லாமாவின் மறுபிறவிகளும் தங்கக் கலசம் முறைப்படியே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை, அறக்கட்டளை தொடரும் என்று அறிவித்திருப்பது, இவர் தான் கடைசி தலாய் லாமா என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தலாய் லாமாவின் வாரிசுரிமை, சீன சட்டங்கள், விதிமுறைகள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் சீனா செல்வாக்கு செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.