தன்னுடைய வாரிசைப் புத்த மத தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
திபெத் புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா, வரும் 6-ம் தேதி தனது 90வது வயதை எட்டுகிறார். இதையொட்டி தலாய் லாமா தனது வாரிசை அறிவிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், தலாய் லாமாவின் மறுபிறவியை தன்னுடைய ‘காடன் போட்ராங்’ அறக்கட்டளை தான் தேர்வு செய்யும் எனவும், இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
தலாய் லாமாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, புதிதாகத் தேர்வு செய்யப்படும் தலாய் லாமாவை அங்கீகரிப்பதில் சீன அரசின் ஒப்புதலைப் பெற்று கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலாய் லாமாவின் முடிவு திபெத்தியர்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார். மேலும், அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே முழுமையாக உள்ளது எனவும், இது முற்றிலும் மத நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.