நாகை நகர்மன்ற கூட்டத்தில் திருப்புவனம் அஜித்குமார் மரணம் குறித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
நாகப்பட்டினம் நகராட்சியில், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 36 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில், நகர வளர்ச்சி தொடர்பாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் பரணிகுமார், திருப்புவனத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் உயிரிழப்பு குறித்துப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நகர மன்ற தலைவர் மாரிமுத்து கவுன்சிலர்களை சமாதானம் செய்து கூட்டத்தை நடத்தினார்.
முன்னதாக, நாகூர் நகரின் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி பெண் கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டனர்.