மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தனி நீதிபதியிடம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் மரண வழக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் ஆஜராகினர்.
அப்போது நிகிதா கொடுத்த புகாருக்கான CSR நகல், நிகிதா மற்றும் அஜித் காவல் நிலையம் வந்து சென்றதற்கான CCTV வீடியோவையும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் புகார் தொடர்பாக நிகிதா காவல்துறையிடம் பேசிய ஆடியோ உரையாடலையும் நீதிபதியிடம் வழங்கினர்.
நிகிதா கொடுத்த புகாரின்பேரில், அஜித்குமாரை அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பி வைத்ததாகவும் திருப்புவனம் காவல் நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தங்கள் விசாரணையில் திருப்தி இல்லையென நிகிதா மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததாக கூறிய திருப்புவனம் போலீசார், எஸ்பியின் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து விசாரித்தது தங்களுக்குத் தெரியாது என விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் திருப்புவனம் போலீசார் தனி நீதிபதியிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.