கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் F-35B போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. F-35 ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நேட்டோ அல்லாத நாட்டில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. F -35B போர் விமானம் ஏன் வந்தது ? என்ன நடந்தது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
F -35B- அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். ரேடாரின் கண்ணுக்கும் புலப்படாத மேம்பட்ட போர்விமானம் என்று கூறப்படும் இந்தப் போர் விமானம், பிரிட்டன் ராயல் கடற்படைக்குச் சொந்தமானது. HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழுவில் இடம்பெற்றிருந்த இந்தப் போர் விமானம், கேரள கடற்கரையில் இருந்து 100 கடல் மைல் தூரத்தில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாதகமான வானிலை,குறைந்த எரிபொருள் மற்றும் ஹைட்ராலிக் அமைப்பு செயலிழப்பு காரணமாகத் திருவனந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பி விடப்பட்டதாகப் பிரிட்டனின் கடற்படை தெரிவித்துள்ளது. பிரிட்டன் கடற்படை முதலில் ஒரு திறந்த வெளியில் தான் போர் விமானத்தை நிறுத்தியதாகவும், விமானத்தை விட்டு வெளியே வர விமானி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் வந்த பிறகுதான் விமானம் ஏர் இந்தியாவின் நிறுத்துமிடத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. உண்மை என்ன என்றால், ஒருங்கிணைந்த விமானக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) தரையிறங்கும் அனுமதி வழங்குவதற்கு முன்பே, F-35B போர் விமானத்தைக் கண்டறிந்து, இந்தியா இடை மறுத்துள்ளது.
இந்திய விமானப்படை F-35B போர் விமானத்தின் பாதுகாப்பான தரை இறக்கத்தை எளிதாக்கியுள்ளது. தளவாட மற்றும் எரிபொருள் நிரப்பும் உதவிகளையும் இந்திய விமானப்படை செய்துள்ளது. இதனால், F-35B போர் விமானத்தின் உணர்திறன் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து, கடுமையான விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
மேலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும், F -35B போர் விமானத்தின் stealth coating, sensor suites, and data systems பாதுகாப்பானதா என்பது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. இந்தியாவில் தரை இறக்கப் பட்டுள்ள, F -35B போர் விமானத்தை 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
போர் விமானத்தைச் சரிசெய்ய, மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ராயல் கடற்படை தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்ள இங்கிலாந்தில் இருந்து 30 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு வருகிறது என்று தெரிவிக்கப் பட்டிருந்தாலும், அந்தக் குழு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
F-35B பறக்கும் தன்மையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், பிரிட்டன் ராணுவச் சரக்கு விமானம் C-17 Globemaster III மூலம், இங்கிலாந்துக்குக் கொன்டு செல்லப்படலாம் என்று கூறப் படுகிறது. Globemaster என்பது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் நிலையான கனரக சரக்கு விமானமாகும். இதில், சுமார் 77 டன் எடையுள்ள சரக்கு விமானத்தையும் கிட்டத்தட்ட இரண்டு F-35 விமானங்களையும் கொண்டு செல்ல முடியும். ஆனால், F-35 போர் விமானம் சுமார் 14 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதன் இறக்கை மட்டும் சுமார் 11 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
C-17 விமானத்தின் சரக்கு வைக்குமிடம், 26 மீட்டர் நீளமும், வெறும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாகும். எனவே, இறக்கைகள் பிரிக்கப்படாவிட்டால், F-35- போர்விமானத்தை, இதில் ஏற்ற முடியாது. தரையில் வைத்து இறக்கைகளைப் பிரித்தபின் F-35 போர் விமானத்தை, C-17 விமானத்தில் ஏற்றுவார்கள் என்றாலும் இறக்கைகளைப் பிரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறப்படுகிறது.
F-35 போர் விமானத்தை இப்படிப் பிரித்தெடுத்துக் கொண்டுபோவது ஒன்றும் புதிதல்ல. 2019 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ( Eglin) எக்லின் விமானப்படைத் தளத்தில், F-35A போர் விமானத்தின் இறக்கைகளை அகற்றி இதே C-17 குளோப்மாஸ்டர் III மூலம் (Utah) உட்டாவில் உள்ள ஹில் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. விமான போக்குவரத்துக்காக F-35 பிரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
2022 ஆம் ஆண்டில், பாதிப்புக்குள்ளான தென் கொரிய விமானப்படையின் F-35A போர் விமானமும், இறக்கைகள் அகற்றப்பட்டு சாலை வழியாக,(Seosan)சியோசனில் இருந்து ( Cheongju )சியோங்ஜு விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, உலகில் எந்த ரேடாராலும் இடைமறிக்க முடியாது என்று அமெரிக்கா கூறிவந்த F-35 போர் விமானத்தை, இடைமறித்து இந்தியா தனது சக்தியை நிரூபித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானத்தின் தொழில் நுட்பத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கூடுதலாக, மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை இந்தியா உலுக்கியுள்ளது.