தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சிவராஜுன் இளைய மகன் தான் இந்த ரோஹித். 13 வயதானர் ரோஹித் அருகில் உள்ள மைதானத்திற்கு விளையாடச் சென்ற நிலையில் இரவு வரை வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர்கள் அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து நாள் கடந்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சிறுவன் ரோஹித்தின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், மாவனட்டி கிராமப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது ரோஹித்தை சிலர் காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தேடுதல் வேட்டை தீவிரமடைந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே கிடைத்த சிறுவனின் சடலம் ரோஹித் என்பதும் உறுதி செய்யப்பட்டது. வயிற்றில் கத்தியால் குத்தியும், காலில் வெட்டப்பட்டும் ரோஹித் கொலை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதியானது.
20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இருவர் ரோஹித்தை கடத்தியதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பெட்ரோல் பங்க் அருகே கிடைத்ததும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியது.
மாவனபட்டியைச் சேர்ந்த மாதேவன் மற்றும், அவரின் நண்பரும் தான் இந்த கொலைச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாவனட்டியைச் சேர்ந்த மாதேவன், அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோஹித் பார்த்ததாகவும், அதை வெளியே சொல்லிவிட்டால் தனக்கு ஆபத்து எனக் கருதி அவரை கடத்தி கொலை செய்ததும் தெரியவந்தது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ஆசை வார்த்தை கூறி வாகனத்தில் ஏற்றி, தான் வைத்திருந்த பீரை வாயில் ஊற்றி மயக்கமடையவைத்து பின் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். மேலும் இந்த கொலைச் சம்பவத்தை மறைக்க தேன்கனிக்கோட்டை சாலையில் திருமுக்கு கீழ்பக்கம் பகுதியில் 50 அடி ஆள்பள்ளத்தில் கீழே தூக்கி வீசியிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சிறுவனைக் கொலை செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
நாள்தோறும் சுறுசுறுப்பாகப் பள்ளிக்குச் சென்றுவந்த 13 வயது சிறுவன், கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒசூர் பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் பட்டப்பகலில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காரில் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்படும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.