அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வகங்களில் முறையான பயிற்றுநர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துவதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கணினி அறிவியல் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைப்பதையும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைத்த பள்ளிக் கல்வித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் கணினி ஆய்வகங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசின் மூலம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்துவதோடு, கணினி அறிவியல் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பெற்றுள்ள தமிழக அரசு, அதற்கான பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கணினி அறிவியல் ஆய்வகங்களில் உள்ள 14 ஆயிரத்து 400 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதி வாய்ந்த பயிற்றுனர்களை தமிழக அரசு நியமிக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதோடு, பிற பாட ஆசிரியர்களை வைத்தும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்றுநர்களை நியமிப்பது முறையாகப் பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜூலை 15 ஆம் தேதி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வழங்கிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தியிருப்பது பணிக்காகக் காத்திருக்கும் பல ஆயிரம் பட்டாதாரி ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஏமாற்று வேலையை உடனடியாக நிறுத்திவிட்டு மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததோ அதே நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுத்த வேண்டுமெனவும் கணினி அறிவியல் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.