தமிழகத்தில் நாளை தொடங்கும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு தொடங்குகிறது.
வரும் 8ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து பொதுப் பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11ஆம் தேதி வரை நடைபெவுள்ள நிலையில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டு பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 446 மாணவர்களும், ராணுவத்தினர் பிரிவின் கீழ் 473 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.