போலீஸ் விசாரணையின்போது கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதே என்று தமிழகத்தில் 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜீத்குமாரைத் தனிப்படை காவலர்கள் கொடூரமாக அடித்து, சித்ரவதை செய்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
லாக் அப் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகளைச் சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் எனத் தமிழ்நாட்டில் 91 சதவிகிதம் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 276 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, சேலம், அரியலூர், விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 489 காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது சரியானதுதான் என்று கூறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
உயரதிகாரிகளின் அழுத்தம், வழக்கின் அவசர நிலை, உண்மையை வெளிக்கொணர்வது, குற்றவாளிகள் மறைத்து வைத்த பொருட்களை விரைந்து மீட்பது போன்ற காரணங்கள் விசாரணையின் தன்மையை மாற்றிவிடுவதாகக் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.