94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையின் ஒட்டுமொத்த மக்களும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான அதிகாலை 3.30 மணி தான் இந்த தாத்தா நாள்தோறும் கண்விழிக்கும் நேரம். எழுந்தவுடன் ராயபுரம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தனது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது தான் தாத்தாவின் முதல் பணி.
அடுத்ததாக தன்னுடைய மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கும் தாத்தா கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்குப் பம்பரமாகச் சுழன்று செய்தித்தாள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்.
முதல் பணிக்கும் இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் தான் என்கிறார் சுறுசுறுப்பு மிக்க பேப்பர் தாத்தா என அழைக்கப்படும் சண்முகசுந்தரம்.
சென்னை ராயப்பேட்டையில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம், தன்னுடைய இளமைப்பருவத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அதற்குப் பின் சுயமாகவே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.
டுத்தடுத்த காலச்சூழலால் தொழில் நிறுவனம் நடத்துவதைக் கைவிட்ட சண்முகசுந்தரம், தண்ணீர் கேன் போடுவது, பால் மற்றும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிறார்.
மகன் மற்றும் மகள்கள் அழைத்த போதிலும் அவர்களுடன் செல்ல விரும்பாத சண்முகசுந்தரம், இன்றளவும் யார் உதவியையும் நாடாமல் 84 வயதுடைய தன் மனைவியோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.
உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கும் நிலையில், வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர உழைப்புக்கு இல்லை எனக்கூறி தன் பணியை நாளுக்கு நாள் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சண்முகசுந்தரம் என்ற பேப்பர் தாத்தா.