அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை எனச் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த நான்காண்டுக் கால ஆட்சியில் பால் விலையில் தொடங்கி மின்சாரம் கட்டணம் வரை தொழில் வரியில் தொடங்கி வழிகாட்டு மதிப்பு வரை வரிகளும் கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்திருப்பதோடு விண்ணை முட்டும் அளவிற்கான விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் சுற்றுப்பயணம் தான் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் சுற்றுப்பயணம்.
கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தித் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிசிடிவி கேமிராக்கள், மேடு பள்ளம் தெரியாத அளவிற்குப் பயணிக்கும் வகையில் இஞ்சின் தொழில்நுட்பம், படுக்கை, மற்றும் கழிவறை வசதி என அனைத்துவிதமான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பிரத்யேக பேருந்து எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணத்தின் முதல் கட்ட நிகழ்வாக விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுகவின் கடந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களை ஆதங்கத்துடன் எடப்பாடி பழனிசாமியிடம் வெளிப்படுத்தினர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக ஆர்வலர்கள் எனும் பெயரில் சிலர் திட்டமிட்டு வழக்குகளைத் தொடர்ந்து செங்கல் சூளைகளை மூடியதாக வேதனை தெரிவித்த செங்கல் உற்பத்தியாளர்களிடம், அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்
உணவு இடைவேளைக்குப் பிறகு தனியார் விடுதியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமியைத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்து சுற்றுப்பயணம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிக்குள் ரோடு ஷோ சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்
பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே பி நட்டா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய அனைவரும் ஒரே அணியில் நிற்பதாகவும், இயற்கையாக அமைந்திருக்கும் இக்கூட்டணி நிச்சயமாக ஆட்சியமைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் இந்த மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் நிச்சயம் வெற்றிகரமாக நடைபெறும் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் வாழ்த்தினார்.
மத்தியில் நிலையான ஆட்சியை பாஜக தந்து கொண்டிருப்பதாகவும், இந்த சட்டமன்றத் தேர்தலோடு திமுகவுக்கு முடிவுகட்டப்படும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
கோவையைத் தொடர்ந்து விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் என வரும் 23 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஆட்சியமைக்க வழிவகுக்குமா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலே முடிவாக அமையும்.