உயிரிழந்த கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரக்கோரியும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார் அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரீனாதேவி என்ற இளம்பெண்ணுக்குக் கடந்தாண்டு அதே ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ரீனாதேவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் கிருஷ்ணன் வாகன விபத்தில் உயிரிழந்தார்.
3 மாதம் கழித்து இரட்டை குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்குச் சென்ற ரீனாதேவியை, கணவரின் குடும்பத்தினர் விரட்டியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு இரட்டை குழந்தைகளுடன் சென்று ரீனாதேவி புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு 18 வயதில் திருமணம் ஆகி இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும், பலவீனமாக இருப்பதாகக் கூறி தனது கர்ப்பபை அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பிறந்து 21வது நாளில் கணவர் உயிரிழந்து விட்டதால், கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தனக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இளம்பெண் வலியுறுத்தினார்.