தமிழகத்தில் அரசு மாணவர் விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, அங்குத் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதிகள் என மாற்றியிருப்பது மாணவ, மாணவியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
அத்தகைய பல்வேறு விடுதிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் எனப் பொதுப்பெயரால் அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அவற்றைக் கண்மூடித்தனமாக வரவேற்கும் கூட்டணிக் கட்சியினர், வழக்கம் போலவே இந்த அறிவிப்பையும் வரவேற்கத் தொடங்கியிருக்கும் நிலையில், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் உட்படப் பலர் மத்தியில் முதலமைச்சரின் அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்குப் பயிலும் மாணவ,மாணவியர்கள் தவித்து வரும் நிலையில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் எந்தவித பயனும் ஏற்படாது என விமர்சித்துள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலவிடுதியில் போதுமான இருப்பிட வசதியின்மை காரணத்தினால் நான்குபேர் தங்க வேண்டிய இடத்தில் 8 முதல் 10 பேர் வரை தங்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற உணவுகள் வழங்கப்படுவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு விடுதிகளில் இருக்கும் பிரச்சனைகளால் காலை எழுந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதையே சவாலாக இருக்கும் நிலையில் அவர்கள் அங்குச் சென்று கல்வி பயில்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்கேயே எரிக்கப்படுவதும், பெயரளவுக்கு மட்டுமே சமைக்கப்படும் உணவுக்கும் மத்தியில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட விடுதிகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
ஏழை, எளிய மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளின் தரத்தை மேம்படுத்தவோ, அதன் உட்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் விளம்பரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றியிருப்பதாக பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.