ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு மேட்டுப்பாளையத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் தோட்டக்கலைத்துறையின் பழ பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மூன்று ஆண்டுகளாக மூடியிருக்கும் பழ பண்ணையை யானைகள் வழித்தடத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான இந்த பழ பண்ணை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு 125 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த பழ பண்ணையில் பல்வேறு அரியவகை மரங்களுக்கான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் மூலம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது.
ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷின நிலை நிலவுவதால், உலகில் மிகச் சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் இங்கு வளர்கின்றன.
மேலும், 300-க்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம்பஞ்சு மரங்கள், அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்குக் கொட்டிக் கிடக்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க பழ பண்ணையைப் பார்வையிட அனுமதி மறுத்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி யானை வலசைப்பாதையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லாறு பழப் பண்ணையை வனத் துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது கல்லாறு பலபண்ணைக்குள் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமாகவும், ஏழைகளில் சுற்றுலாத்தலமாக்கவும் திகழ்ந்து வரும் அரசு தோட்டக்கலை பழ பண்ணையை யானைகளின் வழித்தடத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்து ஏற்கனவே இருந்தது போலப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.