மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே காவல்துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வடக்கு தெரு, தெற்கு தெரு என 2 பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இரு தரப்பினரும் தனித்தனியே கோயில்கள் அமைத்து வழிபட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், தெற்கு தெருவிற்குச் சொந்தமான கோயிலில் சுவர் எழுப்பும் பணியை அப்பகுதியினர் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த எதிர் தரப்பினர் பணியாட்களை அடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் எதிர் தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்துள்ளனர்.