கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மூன்று மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தமாய் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் சடலமாகத் திரும்பியதைக் கண்டு பெற்றோர் மீளா துயரில் மூழ்கியுள்ளனர்.
உருக்குலைந்து கோரமாய் கிடந்த பள்ளி வேன்… உடல் சிதறி பலியான பிஞ்சுகள்… தூக்கிவீசப்பட்டதில் துடித்த மாணவர்கள் எனப் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த காட்சிகள் செம்மங்குப்பம் விபத்தை கண்முன்னே நிறுத்துகின்றன.
கடலூர் – நெல்லிக்குப்பம் சாலை பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி மெட்குலேசன் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சின்னக்காட்டுசாகை, தொண்டமாநத்தம் கிராமங்களில் இருந்து நான்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை நோக்கி சென்றது.
ரயில்வே கேட் இருக்கும் இடம் மேடான பகுதி என்பதால், ரயில் வருவது ஓட்டுநருக்குத் தெரியவில்லை. ரயில் வருவதைக் கவனிக்காமல், ஓட்டுநர் பள்ளி வேனை இயக்க அசுர வேகத்தில் மோதியது மாயவரம் பயணிகள் ரயில்.
இதில் உருக்குலைந்த வேன், 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் வேனில் இருந்த 11ம் வகுப்பு மாணவி ஷாருமதி, 6ம் வகுப்பு மாணவர் நிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேன் காற்றில் பறந்த காட்சியைப் பார்த்து மிரண்டுபோன செம்மங்குப்பத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மாணவர்களை காப்பாற்ற ஓடினார். அப்போது மின் வயர் அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஷ், ஓட்டுநர் சங்கர், உதவியாளர் உள்பட 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மாணவர் செழியன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. விபத்தில் பலியான ஷாருமதியும், செழியனும் உடன்பிறந்த அக்காள் – தம்பி என்பது அவரது பெற்றோரையும் சின்னகாட்டுசாகை கிராமத்தையும் மீளா துயரத்தில் தள்ளியுள்ளது.