சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் குழுமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த பங்கு ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சன் குழும தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உட்பட 7 பேருக்கு, அவரது சகோதரரும், மத்திய சென்னை மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் அண்மையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதில் சன் குழுமத்தின் 60 சதவீத பங்குகளை கலாநிதி மாறனும், காவேரி மாறனும் முறைகேடாக மடைமாற்றம் செய்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக உரிய விளக்கமளிக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
மாறன் சகோதரர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், இருவருக்குமிடையிலான இந்த பிரச்னை முதலமைச்சர் ஸ்டாலினின் மத்தியஸ்தம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் அவர்களின் சகோதரியான அன்புக்கரசி மாறன் ஆகியோரை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மூவரும் இணக்கமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இந்த பிரச்னை தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.