தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கல்லூரிகளுக்கு பணியமர்த்தும் திட்டத்தைக் கைவிடக்கோரி சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
2002ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை பட்டம் பெற்றுள்ளனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் விதிப்படி சுமார் 105 பேராசிரியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், 37 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களை அரசு கல்லூரிக்கு பணிமாற்றம் செய்ய 43-வது நிதிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரிகளுக்கு பணியமர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், அது தொடர்பான ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.