சேலத்தில் உள்ள வாடகை வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு வீட்டைத் திறந்து, 90 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளை திருடியதாக பாஜக நிர்வாகி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது வாடகை வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு வீட்டைத் திறந்து, 90 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளைத் திருடியதாகக் கருணாகரன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தான் 3 ஆண்டுகளாக தனக்குப் பழக்கமான வேல்குமார் என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்குக் குடியிருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கருணாகரன் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஒன்றிய செயலாளராக உள்ள வேல்குமாரின் தம்பி பாஸ்கர் தூண்டுதலின் பேரில் போலீசார் தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது பணத்தையும், நகையையும் வேல்குமாரிடம் இருந்து மீட்டுத்தரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக நிர்வாகியான கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.