இத்தாலி மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ரத்த வேட்டை நாய் புருனோவின் மர்ம மரணம், அந்நாட்டுப் பிரதமர் உட்படப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலி மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட புருனோ என்ற மோப்ப நாய் எப்படி இறந்தது ? பழிவாங்கும் செயலாக புருனோ ஏன் கொல்லப்பட்டது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Bloodhound -அதாவது இரத்த வேட்டை நாய். நாய்களின் உலகில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் இதுதான். மோப்பம் பிடிப்பதில், Bloodhound தான் நடப்பு சாம்பியன். 100 ஆண்டுகளுக்கு முன்பு மான்கள், காட்டுப்பன்றிகள், முயல்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப் பட்ட Bloodhound மோப்ப நாய்கள், இடைக்காலத்திலிருந்து மக்களைக் கண்காணிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
நம்பமுடியாத கண்காணிப்பு திறன்களுக்குப் பெயர் பெற்ற இந்த மோப்ப நாய்கள், சர்வதேச அளவில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாய்களின் வாசனை உணர்வு மிகவும் நுட்பமானதாகும். Bloodhounds தனது மோப்ப உணர்வால் கண்டுபிடித்த சான்றுகள் நீதிமன்ற வழக்குகளில் முதன்மை சான்றுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக 72 கிலோ வரை எடையுள்ள இந்த மோப்ப நாய் அதிகபட்சம் 27 அங்குலம் வரை உயரம் கொண்டது. இந்த நாய்களின், நீண்ட, சுருக்கமான முகங்கள் மற்றும் தொங்கிய காதுகள் அதன் மோப்பத் திறனை மேம்படுத்துகின்றன. இதன் மோப்பத் திறன் மனிதனை விடக் குறைந்தது 1,000 மடங்கு வலிமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 300 மணி நேரத்துக்கும் மேலான வாசனையைக் கூட முகர்ந்து பார்க்கும் திறனைக் கொண்டுள்ளது. ரத்த வேட்டை நாய் என்றாலும்,தனது பயிற்சியாளரிடம் பாசமாகவும் நட்பாகவும் விளங்குகின்றன. 1955 ஆம் ஆண்டு வெளிவந்த வால்ட் டிஸ்னியின் Lady and the Tramp அனிமேஷன் திரைப்படத்தில் ஒரு முக்கிய துணை கதாபாத்திரத்தில் Trusty என்ற என்ற இரத்த வேட்டை நாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது
அப்படி ஒரு ரத்தவேட்டை மோப்ப நாய் தான் பெல்ஜியத்தைச் சேர்ந்த புருனோ. இத்தாலியில் மோப்பநாயாக பணியாற்றி வந்த புருனோவை (Caressa), கரேசா என்ற பயிற்சியாளர் பராமரித்து வந்தார். 88 கிலோ எடையுள்ள ஏழு வயதான ரத்த வேட்டை நாய் புருனோ, தெற்கு இத்தாலியில் உள்ள தனது கொட்டகையில் இறந்து கிடந்தது. ஆணிகள் சொருகப் பட்ட இறைச்சிகளைச் சாப்பிட்டதால், உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாகப் பின்னர் தெரியவந்தது.
புருனோவின் பயிற்சியாளர் (Caressa) கரேசா சட்டவிரோத நாய் சண்டை நடத்தப்படும் இடங்களில் இருந்து நாய்களை காப்பாற்றும் நோக்கத்தில், ENDAS என்ற தன்னார்வ பொது விலங்கு மீட்பு அமைப்பை நடத்துகிறார். ஏற்கெனவே, தனக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாகத் தெரிவித்துள்ள (Caressa) கரேசா, சட்ட விரோத நாய் சண்டைகள் நடத்தும் போட்டியாளர்கள் புருனோவைக் கொன்றிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்தப் படுகொலை மோசமானது என்றும், கோழைத்தனமானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ள இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, புருனோவுடன் தான் இருக்கும் புகைப் படத்தையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
புருனோவின் மரணத்துக்குப் பின்னால் இருப்பவர்களை “நீதியின் முன் நிறுத்தப்படுவதை” உறுதி செய்யுமாறு இத்தாலி சட்டமன்ற உறுப்பினரும், விலங்கு உரிமை ஆதரவாளருமான மைக்கேலா விட்டோரியா, (Brambilla) பிராம்பில்லா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
(Brambilla) இத்தாலியில் பிராம்பில்லா சட்டம் என்று அழைக்கப்படும் புதிய விலங்கு பாதுகாப்புச் சட்டம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி, முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 60,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது, குழந்தைகள் முன்னிலையில் விலங்குகள் தவறாக நடத்தப்பட்டாலோ அல்லது படம்பிடிக்கப்பட்டு ஆன்லைனில் பரப்பப்பட்டாலோ மிகக் கடுமையான தண்டனைகள் பொருந்தும் என்றும் ( Brambilla ) பிராம்பில்லா சட்டம் கூறுகிறது.
தனது வாழ்நாளில் காணாமல் போன ஒன்பது பேரைக் கண்டுபிடித்துள்ள புருனோ கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம், இத்தாலியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.