ஜூன் மாதம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்துக்கு FUEL SWITCH-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. FUEL SWITCH என்றால் என்ன? அதற்கும் விமான விபத்துக்கும் என்ன தொடர்பு? விரிவாகப் பார்க்கலாம்.
242 பேருடன் வானை நோக்கிப் பறந்து சென்ற விமானம் அடுத்த சில விநாடிகளிலேயே தொடர்ந்து இயங்க முடியாமல் தடுமாறியது. பதறிப்போன PILOT “MAY DAY” எனப்படும் அபாயச் செய்தியைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.
இருப்பினும் அந்த விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியானார்கள். ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AIR INDIA விமானத்தின் சோகக்கதைதான் இது.
மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்ட BOEING 787 DREAMLINER விமானம் விபத்தில் சிக்கியது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு கருப்பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் ENGINE-க்கு எரிபொருள் செல்வதைக் கட்டுப்படுத்தும் FUEL SWITCH-ல் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
விமானத்தின் COCKPIT-ல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் LEVER-க்கு கீழேதான் இந்த FUEL SWITCH இருக்கும். ENGINE-ஐ START செய்வதும் அதன் இயக்கத்தை நிறுத்துவதும் FUEL SWITCH-ன் வேலை. இவ்வளவு முக்கியமான பணியைச் செய்வதால் தப்பித்தவறிக்கூட அதன் மீது கைபட்டுவிடக்கூடாது என்பதற்காக FUEL SWITCH-ஐ சுற்றி BRACKET அமைக்கப்பட்டிருக்கும்.
ENGINE-க்குச் செல்லும் எரிபொருள் திடீரென நிறுத்தப்பட்டால் அதன் இயக்கம் தடைப்பட்டுப் பறப்பதற்குத் தேவையான உந்துசக்தியை விமானம் இழக்கக்கூடும். மேலும் GENERATOR-களின் இயக்கமும் தடைப்படுவதால் மின்சாரம் இன்றி COCKPIT-ல் இருக்கும் DISPLAY-கள் செயலிழந்துவிடும்.
விமானத்தின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் FUEL SWITCH, ENGINE-க்குச் செல்லும் எரிபொருளை திடீரென நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
தவறுதலாகவோ, திட்டமிட்டோ FUEL SWITCH-ஐ இயக்கியதற்கான ஆதாரங்கள் கருப்புப் பெட்டியில் இல்லை என விசாரணைக்குழு தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல் FUEL SWITCH-ல் ஏற்பட்ட பிரச்சனைக்கு மனிதத் தவறு காரணமாக இருக்க முடியாது என அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்தடுத்த விசாரணைகளில் விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்படலாம்.