போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு சென்றார். அங்கு அஜித்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகிதா மீது பல புகார்கள் இருந்தபோதும் அவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
போராட்டம் நடத்தவே நெறிமுறைகள் விதிக்கப்படும் நிலையில், அஜித்குமாரை விசாரிக்கும் போது ஏன் அதனை பின்பற்றவில்லை? என்றும், குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு தான் அழைத்து சென்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா? என்றும், உங்கள் காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் சீமான் கூறினார்.