அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசன கால்வாய் சரியாகத் தூர்வாரப்படாததால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம், தாதம்பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி இருந்த சூழலில் மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடத்தில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீரானது கொள்ளிடத்திற்கும், பொன்னாற்று பாசனத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் பொன்னாற்று பாசன கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
பாசன வாய்க்காலைச் சரியாகத் தூர் வாராததே வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.