800 கோடி ரூபாய் ரொக்கப்பணம், போட் கிளப்பில் ஒரு ஏக்கர் நிலம் கிடைத்ததன் அடிப்படையில் கலாநிதி மாறனுடனான பிரச்சனையைத் தயாநிதி மாறன் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு மேலும் இருவர் மாறன் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையைச் சமரசத்திற்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் யார் ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சன்குழும சொத்துக்களைத் தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்தினார்… முரசொலி மாறன் மரணப் படுக்கையிலிருந்த போது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார். சன்குழுமத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றைத் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இவையெல்லாம் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் மீது அவரது சொந்த தம்பியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் சுமத்திய குற்றச்சாட்டுகள்.
அதோடு முறைகேடாகச் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் முரசொலி மாறனின் வாரிசு தாரர்களுக்குத் திருப்பி அளிக்கவில்லையெனில் சிவில், கிரிமினல், கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்தார்.
சன்குழும சகோதரர்களுக்கிடையே எழுந்த யுத்தம் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சன் டிவியின் பங்குகள் ஒரு நாள் வர்த்தகத்தில் ஐந்து சதவிகிதத்திற்கும் மேல் சரிந்த நிலையில் தயாநிதியுடன் எழுந்திருக்கும் பிரச்சனை என்பது குடும்ப பிரச்சனை என சன் குழுமம் பங்குச்சந்தைக்குக் கடிதம் எழுதியது.
சகோதரர்கள் இருவருக்கும் இடையிலான சொத்துப் பிரச்சனை விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஸ்தம் செய்து முடித்து வைத்ததாகத் தகவல் வெளியாகிய நிலையில் தற்போது மேலும் இருவருக்கு அதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. திராவிட கழகத் தலைவர் வீரமணியும், இந்து என் ராமும் இணைந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பு சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சனையைச் சுமூகமாக முடித்து வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சன் குழுமச் சகோதரர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கும் இப்பிரச்சனை திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே முதலமைச்சர் நேரடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடிய திராவிடர் கழகத்தலைவர் வீரமணி மற்றும் தயாநிதிமாறன் மனைவியின் உறவினரான இந்து என் ராமும் சமரசப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். முதன் முதலாக வீரமணியே தாமாக முன்வந்து மாறன் குடும்பத்தினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும், இரு தரப்பினரும் ஊடகங்களுடன் பேசுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜூலை முதல் வாரம் முதல் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அதில் ஒரு சுற்று காணொளிக் காட்சி மூலமாகவும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் மாறன் குடும்பத்தின் நற்பெயருக்கு ஏற்படும் இழப்பு, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தால் அதன் மூலம் ஏற்படும் செலவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
முதலில் 1500 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே தீர்வை எட்ட முடியும் என தயாநிதிமாறன் தரப்பு வலியுறுத்திய நிலையில், கலாநிதி மாறனோ 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீ வீரமணி, இந்து ராம் ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருவரையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்ள வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு சுமார் 800 கோடி ரூபாய் ரொக்கமாகவும், சென்னையின் போட் கிளப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலமும் வழங்கக் கலாநிதி மாறன் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சன்குழும சகோதரர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களுக்கு மட்டுமல்லாது திமுகவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மாறன் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்க்கும் அணியில் திராவிட கழகத் தலைவர் கீ. வீரமணி மற்றும் இந்து ராம் ஆகியோரும் இடம்பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.