உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளது. பூட்டான்,வங்கதேசம்,மற்றும் இலங்கைக்குப் பிறகு, தெற்காசியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை தொடங்கப்படும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை திட்டங்களும் விலைகளும், எப்படி இருக்கும்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டில் இணையச் சேவையும், அதற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இணைய இணைப்பு 25 கோடியிலிருந்து 96 கோடியாக உயர்ந்துள்ளது. . பிராட்பேண்ட் இணைப்புகள் 6 கோடியிலிருந்து 94 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1,452 சதவீத வளர்ச்சியாகும்.
வயர்லெஸ் இணையப் பயன்பாட்டைப் பொறுத்த அளவில், 11 ஆண்டுகளுக்கு முன் 61.66MB என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது, 353 மடங்கு அதிகரித்து 21.30GB ஆக உள்ளது. ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள், டிஜிட்டல் சந்தாதாரர் இணைப்புகள் (DSL), செல்லுலார் கோபுரங்கள் மூலம் இணையச் சேவை வழங்கப்பட்டுவருகிறது. சுமார் 6.44 லட்சம் கிராமங்களில், 6.15 லட்சம் கிராமங்களுக்கு 4G சேவை மட்டுமே கிடைத்து வருகின்றன.
5G தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க ஆப்டிக் ஃபைபர் கேபிள்களும், டவர்களும் அமைப்பதற்கான செலவுகள் அதிகம் என்பதால், எந்த டெலிகாம் நிறுவனங்களும் கிராமப்புறங்களுக்கு இந்த இணையச் சேவையைக் கொண்டு சேர்க்காமல் இருக்கின்றன. அதனால், 4ஜி மற்றும் 5ஜி கோபுரங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில் தற்போது இணையச் சேவைகள் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவை என்ற புதிய தொழில் நுட்பம் வந்தது. இதில் உலகளவில்,எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் நிறுவனம் முன்னணியில் உள்ளது. 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்லிங்க், கடல் மட்டத்திலிருந்து சுமார் 550 கிமீ உயரத்தில் உலகின் மிகப்பெரிய குறைந்த பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களின் தொகுப்பைப் பயன்படுத்துகிறது.
இதுவரை ஸ்டார்லிங்க்கின் சுமார் 8 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்கள் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் 42,000 செயற்கைக் கோள்களை விண்ணில் நிறுவ ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமானோர் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள் இணையச் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
யூடெல்சாட்டின் ஒன்வெப் (Eutelsat’s OneWeb) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்க மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் ஒழுங்குமுறை மற்றும் தேசியப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையை வழங்க உரிமம் பெற்ற ஸ்டார்லிங்க்குக்கு மத்திய அரசு உரிமம் கொடுத்துள்ளது.
செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்கத் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து அனுமதி பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும். கடந்த ஜூலை 8 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த உரிமம், ஸ்டார்லிங்கின் Gen1 செயற்கைக்கோள் விண்மீனை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் செயல்பட அனுமதிக்கிறது.
தனது செயற்கைக்கோள்களிலிருந்து தரைவழி இணையத்தை ஒளிபரப்புக்கு ஸ்டார்லிங்க் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம் அதிர்வெண் அலைவரிசைகளையும் மத்திய அரசின் IN-SPACe ஒதுக்கியுள்ளது. மேலும், uplink மற்றும் downlink வசதிக்காக, Ka மற்றும் Ku பேண்ட் அலைவரிசைகளைப் பயன்படுத்தவும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, ஸ்டார்லிங்கின் உபகரணங்களை இந்தியச் சந்தையில் விற்பதற்காக, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் ஸ்டார்லிங்க் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. விரைவில், ஸ்டார்லிங்க் இணையச் சேவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒரு மாதத்துக்கு, இலவச சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது ஸ்டார்லிங்க்.
பூட்டானில் Residential Lite Plan மற்றும் Standard Residential Plan என்ற இரண்டு திட்டங்களை ஸ்டார்லிங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு திட்டங்களுக்கும் இணைய வேகம் தான் வித்தியாசம், Residential Lite Plan-ல் 23 Mbps முதல் 100 Mbps வரை இணைய வேகம் இருக்க, Standard Residential Plan-ல் 25 Mbps முதல் 110 Mbps வரை இணைய வேகம் இருக்கும். முதல் திட்டத்துக்கு 3000 ரூபாயும், இரண்டாவது திட்டத்துக்கு 4200 ரூபாயும் மாத கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
ஆனால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை கட்டணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவைப் பெறத் தேவையான தொழில்நுட்ப கருவிகளை அமைப்பதற்கான கட்டணம் 33,000 ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதே நேரம் unlimited data சேவை பெற மாதக் கட்டணம் 7,000 ரூபாய் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.