கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான நாற்காலி சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பதால், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான புகைச்சல், தற்போது கொளுத்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் எனக் கூறும் அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டு, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.
இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர உடன்பாடு எட்டப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஒப்பந்தப்படி, முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும், டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கொக்கரித்து வருகின்றனர்.
பிரச்சனை பூதாகரமான நிலையில், முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பொதுவெளியில் வாய் திறக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கடிவாளம் போட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டனர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, தாம் தான் கர்நாடகாவின் முதலமைச்சர் என்றும், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்றும் கூறினார்.
கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், தங்களுக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தற்போது சித்தராமையா முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்று கூறியிருப்பது டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.